எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம் செல்லும்-உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி, பிப்ரவரி-10

2018-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜாதிவெறி வன்முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ‘எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ அமலில் உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் மூலம், இம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய முடியும். இந்த நிலையில், இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை இந்த சட்டத்தில் இருந்து நீக்கி கடந்த 2018 மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

அத்துடன் இந்த வழக்கிற்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்சநீதிமன்றம் கூறியது.

ஆனால் இந்த மாறுதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் குறிக்கோளை கேள்விக்குறியாக்குவதாக கூறி தலித் மக்கள் போராட இந்தியா முழுக்க பந்த் செய்தனர்.

நாடு முழுக்க பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்திருத்தம் தலித் மக்களால் வரவேற்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசு செயல்பட்டுள்ளது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வருடம் முழுக்க விசாரணை நடந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிமதிகள் அருண் மிஷ்ரா, வினித் சரண், மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டதிருத்தம் 2018 அரசியலமைப்பு படி செல்லும் என்று கூறியுள்ளது.

அதோடு, இந்த வழக்கில் கைது செய்ய முன் விசாரணை தேவையில்லை. பணியாளர்களை கைது செய்ய உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை, என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *