ஏப்ரல் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்?

சென்னை, பிப்ரவரி-10

ஏப்ரல் மாத இறுதியில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையில் ராயப்பேட்டையில் இன்று நடைபெற்று வருகிறது.

காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதே போல், வரவிருக்கும் நகராட்சி மாநகராட்சி தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும், கட்சி பலவீனமாக உள்ளதாக கூறப்படும் பகுதிகளை கண்டறிந்து பலப்படுத்துவது, அரசின் திட்டங்களை சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் கேட்டு பெறப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் மாத இறுதியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்பதால் நிர்வாகிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்போதே ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் சேர்த்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *