ஏ.ஜி.எஸ்., பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல், ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

சென்னை, பிப்ரவரி-08

பிகில் பட தயாரிப்பாளர் மற்றும் அப்படத்துக்கு கடன் வழங்கிய சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் இருந்து 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அப்படத்துக்கு பைனான்ஸ் செய்த சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், தயாரிப்பாளர் மற்றும் பைனான்ஸியரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ரகசிய இடங்களில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 77 கோடி பணம் மற்றும் ஆவணங்கள், அடமான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளருக்குத் தொடர்புடைய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொத்து ஆவணங்கள், பிராமிசிரி நோட்டு, முன்தேதியிட்ட காசோலைகள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தயாரித்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய்யிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது. அவரது சொத்து விவரங்கள், நடிகர் விஜய் செய்திருக்கும் முதலீடுகள் பற்றியும் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரி துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினா் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். வருமான வரித் துறையினா், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சுமாா் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

தொடர்ந்து 2 நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது, ரூ.77 கோடி பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *