டெல்லி முதல்வர் ஆவதற்கு பா.ஜ.க.வில் ஒருவருக்கு கூட தகுதியில்லை-அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி, பிப்ரவரி-06

டெல்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்கு கூட இல்லை என்று மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ”டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். டெல்லியில் முதல்வராக வருவதற்கு பாஜகவில் ஒருவருக்கு கூடத் தகுதியில்லை.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை வகுப்புவாத மோதலாக மாற்ற பாஜக முயன்றது. ஆனால், அந்த முயற்சிகள் பலிக்குமா அல்லது தோற்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

மக்களுக்கு யார் நல்ல, தரமான கல்வி, மருத்துவ சிகிச்சை, சாலைகள், 24 மணிநேரமும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். டெல்லி மக்களுக்கு ஏன் பாஜகவினர் இவ்வளவு தொந்தரவு கொடுத்து, மோசமான அரசியலைச் செய்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள், டெல்லியில் வாழும் குடிசை வாழ் பகுதி மக்களை முற்றிலும் மறந்துவிட்டார்கள். இந்த நகரில் உள்ள அங்கீகாரமற்ற குடிசை பகுதிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றன.

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இப்போது தொடரும் அனைத்து இலவச திட்டங்களும் தொடரும், இன்னும் அதிகமான புதிய திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம்”. இவ்வாறு கெஜ்ராவில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *