தேர்தலில் ஜெயிக்காமல் ஆட்சி அதிகாரத்தில் ஜொலித்தவர் ஜேட்லி

நிதியமைச்சராக 4 பட்ஜெட் தாக்கல் செய்தவர்

புதுடெல்லி ஆகஸ்ட் 24
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலமானார் அவருக்கு வயது 66.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரை பலமுறை பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவர் அருண் ஜேட்லி.

நிதியமைச்சராக, பாதுகாப்புதுறை அமைச்சராக, கார்ப்பரேட் விவகாரம், சட்டத்துறை, தொழில்துறை என பலதுறைகளுக்கு பொறுப்பு வகித்தவர் ஜேட்லி. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக 2009 முதல் 2014-ம் ஆண்டுவரையிலும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த, தேர்ந்த வழக்கறிஞராகவும் அருண் ஜேட்லி அறியப்பட்டவர்.
கடந்த 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் அருண் ஜேட்லி. ஜேட்லியின் தந்தை மகாராஜ் கிஷன் ஜேட்லி வழக்கறிஞர், தாய் ரத்தன் பிரபா ஜேட்லி குடும்பத் தலைவியாக இருந்தார்.

டெல்லி பல்கலையில் படிக்கும் போதே அரசியலில் ஆர்வம் கொண்ட ஜெட்லி. ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவராகவும், டெல்லி பல்கலையில் மாணவர் அமைப்பு தலைவராக பொறுப்பு வகித்தவர்.டந்த 1975 ஆண்டில் காங்கிரஸ் கொண்டுவந்த அவசரநிலையை எதிர்த்து ஜேட்லி கடுமையான போராட்டங்களை நடத்தினார். இதனால் அப்போதைய அரசு, ஜேட்லியை கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைத்தது. எமர்ஜென்ஸி முடிந்தபின் சிறையில் இருந்து வெளியேவந்த அருண் ஜேட்லி ஜன சங்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பாஜக உருவானவுடன் இளைஞர் அமைப்பின் தலைவராகவும், 1980-களில் டெல்லியின் செயலாளராகவும் ஜேட்லி உயர்ந்தார். அதன்பின் பாஜகவில் படிப்படியாக வளர்ச்சியை நோக்கிய முன்னேறிய ஜேட்லி 1991-ம் ஆண்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகினார்.1999-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவின் தலைமை செய்தித்தொடர்பாளராக ஜேட்லி இருந்து திறமையாகச் செயல்பட்டார். 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் ஜேட்லிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தனிஅமைச்சராகவும், முதன்முறையாக முதலீட்டு விலக்கல் அமைச்சகத்தை உருவாக்கி அதன் அமைச்சராகவும் ஜேட்லி நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தவுடன் மீண்டும் கட்சிப்பணிக்கு திரும்பிய ஜேட்லி பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராகவும், தனது சட்டப் பணியையும் கவனித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி தேர்வு செய்யப்பட்டவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஜேட்லி வழக்கறிஞர் பணி செய்வதை நிறுத்திவிட்டார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜேட்லி அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு சிம்ம சொப்னமாக திகழ்ந்தார்.2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு அமரிந்தர் சிங்கிடம் ஜேட்லி தோல்விஅடைந்தார். அதன்பின் குஜராத்தில் இருந்தும், உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது. அதுமுதல் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நெருக்கமாக இருந்த மத்திய அமைச்சர்களில் முதன்மையாக இருந்தார் அருண் ஜேட்லி.அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோது தனது காலத்தில் 4 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் ஜேட்லி மே 14-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்தவந்த நிலையிலும் நிர்வாகப் பணியில் முன்புபோல் தீவிரமாக ஈடுபடவில்லை. இதனால், பிரதமர் மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டைக் கூட ஜேட்லியால் தாக்கல் செய்ய முடியாமல் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜேட்லி 2-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் ஜேட்லி தெரிவித்தார்.

இதனிடையே அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் உடல்நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாக எய்ம்ஸ் மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இன்று அவர் காலமானார். மத்திய அமைச்சராக அறியப்பட்ட அருண் ஜேட்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர், மாநிலங்களவை உறுப்பினராகவே பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *