சிறுவனை காலணியை கழற்ற வைத்த விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சீனிவாசன்

முதுமலை, பிப்ரவரி-06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழாவுக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனைக் அழைத்து காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னவென்ட் திவ்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை கழற்றுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்தார் சீனிவாசன்.

“டேய் வாடா… வாடா… செருப்பை கழற்றுடா” என்று அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை அழைக்க, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தின் போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடன் இருந்தார்.

இந்தக் காட்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து காலணியை கழற்ற வைத்ததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *