கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 10 பேர் பதவியேற்பு

பெங்களூரு, பிப்ரவரி-06

கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் இன்று மேலும் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சியமைத்து முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

முதல்கட்ட விரிவாக்கத்தின்போது 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 34 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல்வருடன் மொத்தம் 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக அமைந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் டிச.5-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 11 பேர் வெற்றி பெற்றனர்.

தங்களுக்கு அமைச்சர் பதவியை தர வேண்டும் என புதிதாக பாஜகவில் இணைந்திருந்த 11 எம்எல்ஏக்கள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி அளித்து வந்தனர்.

இதையடுத்து, முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் இரண்டாவது முறையாக இன்று நடந்தது. அதன்படி, பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவில் புதிதாகச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, எஸ்.டி.சோமசேகர், கோபாலையா, பைரதி பசவராஜ், கே.சுதாகர், பி.சி.பாட்டீல், நாராயண கௌடா, ஸ்ரீமந்த் பாட்டீல், சிவராம் ஹெப்பார், ஆனந்த் சிங் ஆகிய 10 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *