நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை, பிப்ரவரி-06

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், நேற்று (பிப்ரவரி-05) காலை 10 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இதற்காக அன்புசெழியன் பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் பெற்ற சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்டவை தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் விசாரணை நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பிறகு வருவதாக கூறிய விஜய்யை, கையோடு காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜயின் வீட்டில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் விஜய்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2-வது நாளாக இந்த சோதனை நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *