பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்கா, பிப்ரவரி-06

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் தோல்வியடைந்ததையடுத்து, இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடன் போட்டியிடலாம் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசை டிரம்ப் வற்புறுத்தியதாக கூறப்பட்டது. ஜோ பிடனும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பான விசாரணையில் நாடாளுமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சினர் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், செனட் சபையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முதல் குற்றச்சாட்டான அதிகார துஷ்பிரயோகம் மீதான வாக்கெடுப்பில் டிரம்ப்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், டிரம்ப்புக்கு எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக 66 உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும். எனவே, முதல் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பிலும், 53-47 என்றே உறுப்பினர்கள் வாக்களிக்க இதில் இருந்தும் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.

100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *