நிர்பயா வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி, பிப்ரவரி-05

நிர்பயா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.

ஆனால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவில் மறு உத்தரவு வரும் வரை தூக்கில் போட தடை விதித்து கடந்த 31-ந்தேதி உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.  மேலும், மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றவாளிகள் 4 பேரும் ஒருவாரத்துக்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்திலேயே மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *