நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு!!!
சென்னை, பிப்ரவரி-05
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அந்த படத்தின் பைனான்சியரான கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யிடம் பிகில் படத்திற்கு பெற்ற சம்பள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு, விஜய்யை நெய்வேலியில் இருந்து அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடைபெறுகிறது. 4 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் விசாரணை நடத்திய நிலையில் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.