திமுகவின் அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது-ராமதாஸ்

சென்னை, பிப்ரவரி-05

2021-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாமக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமகவின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் ராமதாஸ் பேசியதாவது: கட்சி ஆரம்பித்து 32 வருடத்தில் பாமக ஒரு முறை கூட ஆட்சிக்கு வரவில்லை. 70 முதல் 80 எம்.எல்.ஏ. க்கள் பெற்றால் இந்த முறை நாம் ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் ஒதுங்கி கொள்ளுங்கள்.

திமுகவினரிடம் திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் 400 கோடி செலவு செய்து பிகாரில் இருந்து ஒருவரை இறக்கியுள்ளனர். திமுகவின் அரசியல் கார்ப்ரேட் வசம் சென்றுள்ளது. கார்ப்ரேட்டால் தான் நமக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திறமை உள்ள பாமக நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், தமிழகத்தில் வேறு கட்சிக்கு வேலை இருக்காத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பாமக முதலாவது இடத்திற்கு தாவ வேண்டும்.

பெரியார் வாழ்ந்த பூமியை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார்கள். இந்த முறை நாம் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும், தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. ஒவ்வோரு மாதமும் பாமக நிர்வாகிகளுக்கான தணிக்கை கூட்டம் நடைபெறும். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *