அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி, பிப்ரவரி-05

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:- 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.  அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா சுதந்திரமாக செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அயோத்தியில் விரைவில் ராமல் கோவில் கட்டும் பணி தொடங்கும். 

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவிட்டபடி சன்னி வக்ஃபு வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம் என கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதித்து ஒத்துழைப்பை நல்கியதற்கு 130 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ் வணக்கங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் வசிக்கும், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் உட்பட அனைத்து மதத்தினரும், ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள்.

இதன் அடிப்படையிலேயே அனைத்து வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன், தமது தலைமையிலான மத்திய அரசு, ஒவ்வொரு இந்தியர்களுக்காகவும் பாடுபட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *