பிகில் இசை வெளியீட்டு விழாவை கல்லூரியில் நடத்தியது ஏன்?

சென்னை, செப்டம்பர்-24

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உள்ளதாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறியுள்ளார்.

கடந்த 19-ம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், விழா நடைபெறும் வளாகத்திலும் கட்டுகடங்காத கூட்டம் வந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மாவிடம், செய்தியாளர்கள் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா குறித்த கேள்வியை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், தனியார் கல்லூரியில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஆனால் சாய்ராம் கல்லூரி அனுமதி பெறவில்லை என்றும் கூறினார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *