கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரியக்கோவில் குடமுழுக்கு விழா!!!

தஞ்சாவூர், பிப்ரவரி-05

மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கடந்த 1-ம் தேதி ஒன்றாம் கால பூஜை தொடங்கி, நேற்றுடன் ஏழாவது கால பூஜை நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை 4.30 மணிக்கு எட்டாவது கால பூஜை தொடங்கியது. இந்த எட்டாவது கால பூஜை தமிழில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த எட்டாவது கால பூஜையை நடத்தினர்.

இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா தொடங்கியது. காவிரி மற்றும் அதனுடன் இணையும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பெறப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. மேலும், கோயிலின் கொடிமரத்திலும் விமானங்கள் அனைத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அவற்றுக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது.

அப்போது, கோயிலில் குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கமிட்டனர். குடமுழுக்கு நடைபெற்றபோது அனைத்து அறிவிப்புகளும் தமிழிலேயே நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவக் காண ஏராளமான பக்தர்கள் வந்தனர். மேலும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் குடமுழுக்கைகாண வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *