பொதுத்தேர்வு ரத்து: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி… திமுக என்ன செய்தது?

சென்னை, பிப்ரவரி-04

5, 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார சூழலில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது நல்லதல்ல. அது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்; குலக்கல்வியை ஊக்குவிக்கும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதனால்தான் தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். அதுமட்டுமின்றி, இந்தப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் கடந்த மாதம் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தேன்.

அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 27-ம் தேதி காலை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுபற்றி அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதையேற்று பாமக நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும், அதை ஏற்க மறுத்துவிட்ட நான், பொதுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதையேற்று, அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இத்தகைய சூழலில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் கைவிடப்படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மாணவர்களுக்காக இதை செய்திருப்பதில் பாமக பெருமிதம் கொள்கிறது.

அதேநேரத்தில், தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன? திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எத்தனை முறை பேசினார்? என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் தோல்வி அடைந்து விட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *