தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நடிகர் ரஜினிக்கு சம்மன்

சென்னை, பிப்ரவரி-04

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.

வருகிற 25-ம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் குறித்து அவருக்கு தெரிந்த விவரங்களை தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை காண மே 30-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றார்.

அதன் பின் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், வன்முறையின் போது வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள் தான். போராடும் மக்கள் அல்ல. அந்த சமூக விரோதிகள் யார் என்று எனக்கு தெரியும். அதை நான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என கூறியிருந்தார். இந்த பேட்டியில் ரஜினி கூறியது தான் அவருக்கு சம்மன் அனுப்ப முக்கிய காரணம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *