5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து-தமிழக அரசு அதிரடி!!!

சென்னை, பிப்ரவரி-04

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இதற்கு, பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியது. எதிர்க்கட்சிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 2019-2020 முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி  அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதனால், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வு நடத்தப்படும் என வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பழைய நடைமுறை படியே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *