ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு: பேரவை செயலாளர் பதிலளிக்க ஆணை

டெல்லி, பிப்ரவரி-04

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த புகாரில் நடவடிக்கைகள் எடுக்காததால், திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் வாதிட்டனர். 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் வழக்கில் எந்த முடிவும் எடுக்காமல் 3 ஆண்டுகளாக இருக்க முடியாது என்று கபில் சிபல் வாதிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை ஓ.பி.எஸ். மீறினார் என்பதே எதிர் தரப்பின் குற்றச்சாட்டு என்று தெரிவித்த முகுல் ரோத்தகி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற அடிப்படையில் திமுகவின் மனுவை ஏற்க முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, தேர்தல் ஆணைய வழக்கை காரணம் காட்டி கால தாமதம் செய்தது ஏற்புடைதா? என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் 3 ஆண்டு தாமதம் என்பது தேவையற்றது என்றும், வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *