டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை தேவை- உதயநிதி ஸ்டாலின்

சென்னை, பிப்ரவரி-03

பணம் படைத்தவர்களுக்கே அரசு வேலை என்கிற சூழலை அ.தி.மு.க அரசு உருவாக்கி விட்டதாக திமு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குருப்-4. குரூப்-2 ஏ தேர்வுகளில் மோசடி நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பலரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாரிமுனை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே தேர்வு முறை கொண்டு வரப்பட்டது எனவும், அதையும் அ.தி.மு.க அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு பணம் படைத்தவர்களுக்கு அரசு வேலை என்ற சூழலை உருவாக்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நேர்மையாக செய்யாத அ.தி.மு.க அரசு, தேர்வாணைய முறைகேடு வழக்கையும் முறையாக விசாரிக்காது எனவே வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞரணி அமைப்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *