டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்

டெல்லி, பிப்ரவரி-04

டெல்லி தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிக, மிக எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் டெல்லியில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ‘டைம்ஸ் நவ்’ தொலைக் காட்சி சார்பில் சமீபத்தில் டெல்லியில் 70 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், டெல்லி தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிக, மிக எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 54 முதல் 60 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. 52 சதவீதம் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கடந்த 2015-ம் ஆண்டு கிடைத்த வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மிக்கு 2.5 சதவீதம் வாக்குகள் குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு 10 முதல் 14 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அந்த கட்சிக்கு 34 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 2015-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதாவுக்கு இந்த தடவை 1.7 சதவீதம் வாக்குகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அந்த கட்சி 4 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் வேறு சில ஆச்சரியப்படுத்தும் சுவாரசிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பிரதமர் பதவிக்கு யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 75 சதவீதம் பேர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர். ராகுல் பிரதமர் ஆவதற்கு வெறும் 8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 71 சதவீதம் பேர் மத்திய அரசின் முடிவுக்கு வலுவான ஆதரவை தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டம் தேவையற்றது என்று 52 சதவீதம் பேர் கூறியுள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *