அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

சென்னை, பிப்ரவரி-03

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீதான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான புகாரில், அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணை கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததால், மீதமுள்ள 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரனை தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

5 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையில் ரவிக்குமார், சுரேஷ், ராஜா, குமரன் ஆகிய நான்கு பேருக்கு சாகும் வரை சிறையில் அடைக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு வழக்கமான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *