பிப்.21 முதல் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!!!

சென்னை, பிப்ரவரி-03

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் 2020 பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமை கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, இதுவரை 14 பொது தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் திமுக ஆகும்.

திமுக சட்டதிட்டங்களின்படி, பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதற்கட்டமாக திமுக கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதை தொடர்ந்து ஒன்றிய, நகர, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.

அதன் பிறகு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிந்ததும், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *