பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதி பேரணி

சென்னை, பிப்ரவரி-03

பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்த அண்ணா, ஆட்சியில் இருந்தது மிகக் குறைவான காலகட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவரின் 51ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் இன்று காலை 8 மணியளவில் அண்ணா நினைவு தின அமைதிப்பேரணி தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய அமைதி பேரணி கடற்கரை சாலை வழியாக மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க, பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாநில, மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகள் வகிப்போர், தொண்டர்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கலைஞர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *