மத்திய பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் தான் கொடுப்பேன் – ப.சிதம்பரம்

டெல்லி, பிப்ரவரி-01

பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், வளர்ச்சியை வேகப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ”சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் கேட்ட மிகப்பெரிய பட்ஜெட் உரை நிர்மலா சீதாராமனுடையதுதான். ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமில்லை.

2020-21-ம் ஆண்டில் வளர்ச்சி இருக்கும் என்று யாரும் நம்பும்விதமாக இல்லை. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை வளரும் என்பது வியப்புக்குரியதாகவும், பொறுப்பற்றதாகவும் இருக்கிறது,

பொருளாதாரத்தை மீட்டெடுத்தலில் மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் சீர்திருத்தங்களுக்கு வழங்கப்பட்ட எந்த ஆலோசனையையும், கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக நிராகரித்துள்ளார்.


பட்ஜெட்டில் உள்ள கருத்துகள், பிரிவுகள், திட்டங்கள், பேச்சு ஆகியவை கேட்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகப்பெரிய சலவைக்கடைக்காரர் பட்டியல் (லாண்டரி லிஸ்ட்) போன்று திட்டங்கள் இருக்கின்றன.

பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், முதலீட்டை ஊக்கப்படுத்துதல், திறம்பட வழிநடத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட்டுவிட்டது.

இந்தியப் பொருளாதாரத்தில் தேவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முதலீட்டுக்க பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு சவால்களையும் நிதியமைச்சர் அடையாளம் கண்டதாக தெரியவில்லை. நீங்கள் இதுபோன்ற பட்ஜெட்டை கேட்கவில்லை. இந்த பட்ஜெட்டுக்காக வாக்களித்து பாஜகவை ஆட்சியில் அமரவைக்கவும் இல்லை”. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு ஒன்று முதல் 10 வரை என்ன மதிப்பளிப்பீர்கள் என்று சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “10 என்பது இரட்டை இலக்கம், ஒன்று மற்றும் பூஜ்ஜியம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *