15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…
சென்னை, செப்டம்பர்-24
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில், 13 மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கடலில் வலுவான காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக் கடல் பகுதி, மாலத்தீவு, தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.