2020-2021 பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்
டெல்லி, பிப்ரவரி-01
2020 – 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக நிதியமைச்சகம் வந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், நிதித்துறையின் இணையமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்தார். இதனை தொடர்ந்து காலை 10.15 மணியளவில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இது மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட். லோக்சபாவில் காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக இந்த பட்ஜெட்டிற்காக பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், முக்கிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை (எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படியான பட்ஜெட்டை) தாக்கல் செய்வது நிதியமைச்சருக்கு சவாலான ஒன்றாக உள்ளது.