நிர்பயா வழக்கு: திடீர் திருப்பம்- தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

டெல்லி, ஜனவரி-31

நிர்பயா வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. குற்றவாளிகள் மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனுவும், சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதையடுத்து நாளை நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வந்தது. இந்தநிலையில் குற்றவாளிகள் சார்பில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த மனு மீதான முடிவு தெரியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற நீதிமன்றம் நாளை காலை அவர்கள் நான்கு பேருக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்றக்கூடாது என டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *