விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி

சென்னை, செப்டம்பர்-24

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக இருந்த நா. புகழேந்தி போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிடும் என அறிவித்தது. அதிமுக கூட்டணியில் இரு தொகுதிகளிலுமே அதிமுகவே களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் இரு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், மனுக்களை பூர்த்தி செய்து கட்சி தலைமையகத்தில் நேற்று கொடுத்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என விருப்பம் தெரிவித்து பொன்.கவுதம சிகாமணி விருப்ப மனுவை அளித்திருந்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் பங்கேற்கவில்லை.

விருப்பம் தெரிவித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விழுப்புரத்தை சேர்ந்த புகழேந்தி திமுகவில் ஒன்றிய செயலாளார், பொருளாளர் என பல முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *