அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும்: ஜனாதிபதி உரை

டெல்லி, ஜனவரி-31

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு அரசியல் சாசனம் வழிகாட்டுகிறது.

கடந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை கூட்டத்தொடர் என்றே சொல்லலாம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. மத்திய அரசு ஏழைகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அயோத்தி தீர்ப்பை மக்கள் முழு மனதுடன் ஏற்றுள்ளனர்.

புது இந்தியாவை உருவாக்க அரசுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. இதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. இந்த புது இந்தியாவில், நாட்டின் எந்த பகுதியும் விடுபடக்கூடாது. சர்வதேச அளவில், பல துறைகளில் இந்தியா முன்னேறியுள்ளது.

2019 ல் முக்கியத்துவம் வாய்ந்த பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் முக்கியமானது. இந்த நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்காக காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச மக்களை பாராட்டுகிறேன். இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கிடைக்கும் நலன்கள் கிடைக்கும்.

வளர்ச்சி திட்டங்கள் துரிதமாகும். காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். காஷ்மீர், லடாக் மக்களுக்கு சமஉரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் ஜனநாயகத்தை வலிமை இழக்க வைத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும் என நம்புகிறேன். கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம், சீக்கியர்கள், தங்களது மத குருவை வழிபட முடியும்.

அசாமில் போடோ அமைப்பினருடன், அரசு அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் அமைதி திரும்புவதுடன், வளர்ச்சி அதிகரிக்கும்.

நாடு பிரிவினைக்கு பின்னர், பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டோர் அடைக்கலம் கேட்டால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என தேசத்தந்தை மஹாத்மா காந்தி கூறியுள்ளார்.

தேசத்தந்தையின் விரும்பத்தை நாம் மதித்து நடக்க வேண்டும். அவரின் கனவை நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றம், கொடூர செயல்கள், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் ஈடுபடுவோரை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு உதவும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கமாகும்.

விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது நாடு இளைஞர்கள் நிரம்பிய நாடு. டிஜிட்டல் தேசமாக அரசு ஊக்குவித்து வருகிறது. தொழில் துவங்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *