37 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய நடராஜர் சிலை

நெல்லை, செப்டம்பர்-24

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்மன் கோவிலில் வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை கடந்த 1982 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்ததை கண்டு பிடித்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் அதனை மீட்டுக்கொண்டு வந்தனர்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு 23-ம் தேதியன்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் நீதிபதி சிலையை மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

அதன்பிறகு கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் சார்ந்த அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்ட சிலை நெல்லை-அம்பாசமுத்திரம் பிரதான சாலை வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், நடராஜர் சிலை, அடுத்த 10 நாட்களுக்கு கோவிலின் வெளி பிரகாரத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை அருகில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறிய நிலையில், மீண்டும் அம்மன் கோவிலிலேயே சிலையை வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *