நானும் கருணாநிதி மகன் தான்….நினைத்ததை சாதிப்பேன் – மு.க.அழகிரி

மதுரை, ஜனவரி-30

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தனது ஆதரவாளர் வழக்கறிஞர் மோகன் குமார் இல்லத் திருமண விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட மு.க.அழகிரி, அதே மேடையில் தனது பிறந்த நாளையும் ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.

இதன் பிறகு மேடையில் மு.க. அழகிரி பேசியதாவது: “அன்புத் தலைவர் கருணாநிதி, அன்போடு மோகன் என்று அழைக்கூடிய மோகன் குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது எனக்கு பெருமையாக உள்ளது.

மோகன் தான் செய்கின்ற வழக்கறிஞர் தொழிலை வைத்து கட்சியினருக்கு முடிந்த அளவு உதவக்கூடியவர். எல்லோருடனும் நன்கு பழகக்கூடியவர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூட சகோதரி சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வழக்கறிஞர் மோகன் குமார் எந்த அளவுக்கு உதவி செய்தார் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதையெல்லாம் மறந்திருக்க மாட்டார், மறக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது மறப்பது என்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால், அதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தச் சூழலில் மோகன் குமார் எனது தலைமையில் அவரது குடும்பத் திருமண விழாவை நடத்தியிருப்பது, இதை விட ஒரு மகிழ்ச்சியை அவர் என் குடும்பத்தாருக்கு எப்படிக் கொடுக்க முடியும்? என்னைப் பார்த்தாலே சில பேர் ஓடுகின்றனர். அதிமுகவினர் கூட என்னைப் பார்த்தால் வர்றாங்க, பேசுறாங்க. வணக்கம் போடுறாங்க. நான்தான் இந்த ஊரு எம்எல்ஏ, எம்.பி. என்று அவர்களே என்னிடம் அறிமுகம் செய்து கொள்றாங்க.

ஆனால், என் கூட பழகினவங்க என்னை பார்ப்பதற்கு வரவே இல்லை. நான் மதுரைக்கு வருவதற்கு முன்பே, நான் எப்போது வருவேன், செல்வேன் என்று கேட்டு தெரிந்து வைத்து கொள்றாங்க. நான் வந்ததற்கு அப்புறம் வரலாம் என்று ஊரை விட்டே போயிடுறாங்க.

அந்த அளவுக்கு நிலைமை மாறிபோய் விட்டது. அந்த நிலைமையெல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. மாறவில்லையென்றால் அவ்வளவுதான். மாறும் என்று நம்புகிறேன். ஏனென்றால் என்னைப் பற்றித் தெரியும். நினைத்ததை சாதிப்பேன். நினைத்ததை முடிப்பேன். மற்றவங்க மட்டும் கலைஞரோட பிள்ளை கிடையாது. நானும் கலைஞரின் மகன்தான்”. இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *