சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு-பிப்.6-ம் தேதி பா.ம.க. போராட்டம்

சென்னை, ஜனவரி-29

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிப்ரவரி 6-ஆம் தேதி பாமக போராட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இவ்விஷயத்தில் மத்திய அரசு இன்று வரை உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அறிவித்த ஓபிசி கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. அதுமட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பல தொகுப்புகளாக பிரித்து வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.

அனைத்து மக்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் அச்சாணி எனும் நிலையில், அதை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்வர வேண்டும்.

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி, பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *