தீவிரவாதத்தில் ஏது நல்லது, கெட்டது? – பிரதமர் மோடி

நியூயார்க், செப்டம்பர்-24

அமெரிக்காவுக்கு ஒரு வார காலம் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணாம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். முதற்கட்டமாக ஹூஸ்டன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடி, எரிசக்தித் துறை நிறுவன அதிகாரிகள், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர், என்.ஆர்.ஜி மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த `ஹவுடி மோடி’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதனையடுத்து நியூயார்க் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் அவையின் 74-வது கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் மோடி பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா, தேவை மற்றும் பேராசை கூடாது என்ற தத்துவங்கள் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு ’தீவிரவாதம் அதிதீவிர அடிப்படைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற தலைப்பில் மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது, ஆயுதங்கள் உதவி வழங்குவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும்.

ஐ.நா. தடை வித்துள்ள தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் நாம் அரசியல் செய்வதைத் தவிர்ப்பது அவசியம் எனக்குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஐ.நா.வின் உத்தரவுகளை தீவிரமாக செயல்படுத்த முயல வேண்டும். தீவிரவாதத் தாக்குதல் உலகில் எங்கு நடந்தாலும் அது தீவிரவாதம்தான். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம், சிறிய தாக்குதல், பெரிய தாக்குதல் என்றெல்லாம் இல்லை. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.

தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் நாம் மேற்கொண்டுள்ள கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து, உறவுகளை வலுப்படுத்த வேண்டும். பிராந்திய ரீதியான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். தீவிரவாதத்தை உலக அளவில் எதிர்க்க ஒற்றுமையும், தயார் நிலையும் தேவை. இதேபோன்ற நிலையை நாம் பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பதிலும் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *