ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்!!!

பாட்னா, ஜனவரி-29

தேர்தல் வியூக அமைப்பாளரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு திட்டங்களை வகுத்து கொடுப்பவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

பின்னர் பிகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ஐக்கிய ஜனதா தள கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் துணை தலைவர் பதவியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதாதள கட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *