குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: அமைச்சர் ஜெயகுமார்

சென்னை.ஜனவரி.29

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என அமைச்சர் ஜெயகுமார்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் நடத்திய குரூப் 4 தேர்வில் பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் வாழ் நாள் முழுவதும் அரசு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன், தேர்வாணைய ஆவண காப்பக கிளார்க் ஓம்காந்தன், இடைத்தரகர்கள், ஆவடி வெங்கட்ரமணன், தேனி பாலசுந்தரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று பணியாளர் நலத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர். முறைகேடுகள் தொடர்பாக விரிவாக விவாதித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் பேர் குரூப் -4 தேர்வை எழுதி இருந்தார்கள். அரசு பணியாளர் தேர்வாணையம் சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. 100 சதவீதம் நம்பகத்தன்மை உண்டு.

இப்போது 2 மையங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததும், வெளிப்படையாகவே விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடு செய்ததாக கண்டறியப்பட்ட 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடந்ததை ஒரு போதும், ஏற்றுக்கொள்ள முடியாது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

கருப்பு ஆடுகள் நிச்சயமாக கண்டுபிடிக்கப்படுவார்கள் சிறு புள்ளியோ, பெரும் புள்ளியோ எந்த புள்ளியாக இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை இருக்கும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்களை எடுக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.அரசு தரப்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இளைஞர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அதே நேரத்தில் ஒரு மையத்தில் நடந்த முறை கேட்டுக்காக ஒட்டு மொத்தமாக கஷ்டப்பட்டு தேர்வு எழுதிய 16 லட்சம் பேரையும் கஷ்டப்படுத்த முடியாது அல்லவா?

இது என்கருத்து அதே நேரம் தேர்வாணையம் ஏதாவது ஒரு முடிவை மேற்கொண்டால் நான் எதுவும் செய்ய முடியாது.வேறு மையங்களிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று அனுமானமாக கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அதிகாரிகள் ‘கோடிங் சீட்’ அனைத்தையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

இவர்களைப்போல் மற்றவர்களும் நிரப்ப வில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மையங்களில் தவறு நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

அதேபோல் வேறு குரூப் தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அனுமானமாக கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. எதிர்காலத்தில் இந்த மாதிரி தவறுகள் நடக்காத வண்ணம் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்படும்.

பணம், அதிகாரத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. வழக்கு சி.பி.சி.ஐ.டி. மூலம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாது. குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடந் திருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் அதற்கான முகாந்திரங்கள் இருந்தால் நிச்சயமாக சி.பி.சி.ஐ.டி. அதுபற்றியும் விசாரிக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த ஒடிசா மாநிலத்தில் தனி சட்டம் இருக்கிறது. அதை மாடலாக கொண்டு தமிழகத்திலும் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டு வரப்படும் என்று  அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *