முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ.38.52 கோடி ஒதுக்கீடு

சென்னை, செப்டம்பர்-24

வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கும், சிறப்பு கருவிகள் வாங்குவதற்கும் தமிழக அரசு சார்பில் 32.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது, முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்ல தேவையான உபகரணங்களுடன் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவில் கையிருப்பு வைத்துக்கொள்ளவும், மழைக்காலங்களில் கீழே விழும் மரங்களை அறுக்க இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மக்களை பாதுகாக்க அனைத்து துறை செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக ரூ.30.27 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.7.25 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.1 கோடியும், மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *