அதிமுகவை தொட்டவர்கள் கெட்டார்கள் – விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர். அதேபோல், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும்’ என பேசினார். இது, அதிமுக அரசை மறைமுகமாக விஜய் விமர்சிதுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பழுத்த மரம் தான் கல்லடி படும், அதிமுக பழுத்த மரம். விஜய்யோ, கவுண்டமணியோ செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *