அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

சென்னை, ஜனவரி-28

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் என் மீது குற்றஞ்சாட்டுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மாநில அளவிலான ஆய்வு கூட்டத்திற்கு பின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், பேசியதாவது: தமிழக உள்ளாட்சி துறை இதுவரை மத்திய அரசின் 107 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. சீர்மிகு நகரத்திட்டத்தில் சிறப்பாக திட்டப்பணிகளை நிறைவேற்றியமைக்காக அகில இந்திய அளவில் தமிழ்நாடு மாநிலம் 146.2 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

அம்ருத் திட்டப்பணிகளை நிறைவேற்றியதில் 58.16 புள்ளிகளுடன் இந்திய அளவில் தமிழகம் 11-வது இடத்தில் உள்ளது. அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் போன்ற பணிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து மேற்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.

நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அனைத்து கட்டடங்களிலும் இருப்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு சென்னை மாநகரில் மட்டும் சுமார் 3 லட்சம் கட்டடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 19.45 லட்சம் கட்டடங்களிலும் பேரூராட்சி பகுதிகளில் 20.75 லட்சம் கட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அரசு பதவியேற்ற பிறகு உள்ளாட்சித்துறையில் 47,000 புதிய கிராம சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்காலத்தில் 4,900 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது, 7,565 எம்.எல்.டி. அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கு தொழில்புரிய கடனுதவியாக இதுவரை ரூ.24,460 கோடி வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியை கூறி என் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவரின் அறிக்கைக்கு பிறகே எனக்கு இந்த தகவல் தெரியவந்தது. காவல் துறை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இதுநாள் வரை நான் தலையிட்டதில்லை.

மு.க.ஸ்டாலின் அமைச்சராக பதவி வகித்த உள்ளாட்சி துறைக்கு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான் அமைச்சராக இருப்பதை ஒரு காழ்ப்புணர்ச்சியாக வைத்து எப்பொழுதும் என் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஸ்டாலின் என்னை எதிர்ப்பதை ஒருவகையில் பெருமையாக கருதுகிறேன். மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டை ஆரோக்கியத்துடன் எடுத்துக்கொண்டு சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகிறேன்.  இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *