மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக – சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி

மும்பை, செப்-23

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அடுத்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அந்த கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.

ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டபோதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று கடந்த 20-ந் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால், இதுவரை து இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க., சிவசேனாவுக்கு கூடுதல் தொகுதிகளை விட்டு கொடுக்க மறுத்ததால் கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா ஆர்வம் காட்டியது. அப்போது மும்பை வந்த அமித்ஷா ‘மதோஸ்ரீ’ இல்லத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து கூட்டணி உருவானது.

சிவசேனா கட்சி தங்களுக்கு சரிசமமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. 122 இ்டங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *