தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும்

மதுரை, ஜனவரி-28

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு தரப்பில் ஆகம விதிகள் படி சமஸ்கிருதத்தில் தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என வாதிடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நிகழ்வினை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தமிழர்களின் தனி அடையாளமான தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறிப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் சமமான மதிப்பே வழங்கப்படுகிறது என்றும் குடமுழுக்கு விழாவை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *