பிரதமர் மோடியை தொடர்ந்து Man VS Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்

பந்திப்பூர், ஜனவரி-28

Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிலையில், தற்போது நடிகர் ரஜினி காந்த் பங்கேற்றுள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் மனிதனும் காடும் (மேன் வெர்சஸ் வைல்டு) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அடர்ந்த காடுகளில், வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று பின்தொடரும் இந்த நிகழ்ச்சியானது அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்படும். 

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.  அடர்ந்த காடுகளில் தன்னந்தனியே பயணம் செய்வது, மலைகளில் ஏறுவது, நீரோடைகளை கடப்பது என பியர் கிரில்ஸின் பல்வேறு சாகச பயணங்கள் இதில் ஒளிபரப்பப்படும்.

டிஸ்கவரி தொலைகாட்சியின் இந்த தொடரில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் சாகச பயணத்தை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பந்திப்பூர் சரணாலயத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பின் 2-வது நாளான இன்று ஹெலிகாப்டர் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடிகர் ரஜினி காந்த் அழைத்துச் செல்லப்பட்டார். பந்திப்பூர் சரணாலயத்தில் யானைகள் மற்றும் கறுஞ்சிறுத்தை அதிகம் உள்ள பகுதியாக கூறப்படுகிறது. சாலைகளில் யானைகள் இயல்பாக கடந்து செல்லும்; நடிகர் ரஜினி படப்பிடிப்பிற்காக சிறுத்தைகள் உள்ள இடம் கேட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *