‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து தள்ளிய மோடி, டிரம்ப்

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது என பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்துள்ளார். அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் டிரம்ப் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் என பிரதமர் மோடி கூறினார். எளிதாக அணுகக்கூடிய அதிபராக டிரம்ப் இருக்கிறார், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் எனவும் தெரிவித்தார்.

ஹூஸ்டன், செப்-23

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

பிரமாண்டத்துக்கு பெயர் பெற்றது டெக்சாஸ் மாகாணம். நாம் இங்கு புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறோம். இது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம். அதிபர் டிரம்புக்கு உலக அரங்கில் அறிமுகம் தேவை இல்லை. இந்திய – அமெரிக்க உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் டிரம்ப். இந்நிகழ்ச்சியில் நான் 130 கோடி மக்களின் பிரதிநிதியாகவே கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்திருப்பது, இந்தியாவை உன்னதமாக்கி உள்ளது.

அனைவருக்கும் வளர்ச்சி என்பதே எங்களது இலக்கு. புதிய இந்தியாவே எனது லட்சியம். புதிய இந்தியாவை படைக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம். இந்திய தேர்தல் ஒரு ஜனநாயக திருவிழா. இந்தியாவில் அதிக அளவில் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

முன் எப்போதும் இல்லாத வசதிகளை கடந்த 5 ஆண்டுகளில் எட்டியுள்ளோம். குடிமக்களை சக்தி மிக்கவர்களாக மாற்றி வருகிறோம். இந்திய கிராம பகுதிகளில் சுகாதாரம் 99 சதவீதம் மேம்பட்டுள்ளது. கிராமப்புற சாலை வசதிகள் 97 சதவீதம் மேம்பட்டுள்ளன. 95 சதவீத வீடுகளுக்கு காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உள்ளோம்; 100 சதவீத குடும்பங்கள் வங்கி கணக்கை துவங்கி உள்ளனர்.

இந்தியாவில் இணைய சேவை குறைந்த விலையில் கிடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து இணைய சேவையை விரிவுபடுத்தியுள்ளன. ஒரே வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் கிடைத்துவிடுகிறது. தொழில் துவங்குவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒருவர் தொழில் துவங்கலாம். சவால்களை நிர்ணயித்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். பெரிய வெற்றிகளை நோக்கி கனவு காண்கிறோம்.

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துவிட்டது. வரி செலுத்துவதை எளிமைப்படுத்தி உள்ளோம். வருமான வரி ஆன்லைனில் செலுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளோம். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் வரி செலுத்தி உள்ளனர். சமூக நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்பதன் மூலம் ஊழல் கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது.

ஊழலை ஒழிக்க, மூன்றரை லட்சம் போலி நிறுவனங்கள் களை எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 1500க்கும் மேலான பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரிவினைவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஒரு நாடு அடைக்கலம் தந்து வருகிறது. அது எந்த நாடு என்பது உலகம் அனைத்திற்கும் தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலையை நாம் ஏற்படுத்தி வளர்ச்சி கண்டு வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 ஆக உள்ளது. குறைந்த பணவீக்கம், நிறைந்த வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது. அந்திய முதலீடு இந்தியாவில் இருமடங்கு அதிகமாகி உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக கார்ப்பரேட் வரிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. புதிய மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். சவால்கள் தான், நமது லட்சியங்களின் உந்து சக்தி.

டிரம்ப் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகிறார். அவருடைய மன வலிமையை நாம் பாராட்டுவோம். டிரம்புடன் இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதன் மூலம் பல நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

பேச்சுவார்த்தையில் நினைத்ததை அடையும் திறன் கொண்டவர் டிரம்ப். அவரிடம் நான் பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கள் இயக்கு சக்தியாக இருக்கிறீர்கள். வெகுதூரத்தில் இருந்தாலும், இந்தியா உங்களை விட்டு தூரம் இல்லை. இந்தியாவுக்கு 100 முறை வருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு மோடி தனது உரையை முடித்தார்.

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை ;-

மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் டிரம்ப் புகழாரம் செய்துள்ளார். இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வனர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் டிரம்ப் தெரிவித்தார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சியைப் பெற மோடியுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து செயல்படும் எனவும் கூறினார். இந்தியாவில் நடக்கும் என்பிஏ கூடைபந்து போட்டிகளை நேரில் வந்து பார்ப்பேன் எனவும் தெரிவித்தார். மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்துள்ளது, பல துறைகளில் முன்னேறியுள்ளது எனவும் கூறினார். இந்தியாவில் 30 கோடி மக்களின் வறுமையை போக்கியுள்ளார் மோடி என தெரிவித்தார். இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்வதில் அமெரிக்கா பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது என தெரிவித்தார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை கடந்த 51 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என கூறினார். நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். இந்தியாவின் பிரதமர் மோடியுடன் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன் என கூறினார். ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் என கூறினார்.

அனைவரும் சவுக்கியமா:

தொடர்ந்து, அதிபர் டிரம்பை அழைத்த மோடி, அவருடன் கைகோர்த்தபடி அரங்கை வலம் வந்தார். மேளதாளங்கள் முழங்க அவர்கள் வலம் வந்த போது, கரகோஷம், அரங்கம் எங்கும் எதிரொலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *