ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை கோரி மனு

டெல்லி, ஜனவரி-28

காவிரி டெல்டா பகுதியில், ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, காவிரி விவசாயிகள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியில், ‘ஹைட்ரோ கார்பன்’ எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஜன.16-ல், காவிரி டெல்டா பகுதியில், அனைத்து வகை எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தவகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை தொடங்குவதற்கு முன், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும்; மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது.

இது, அப்பகுதியில் வாழும் ஏராளமான விவசாயிகள் மற்றும் இதர பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் பாதிக்கும். எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *