ஆந்திர சட்ட மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி, ஜனவரி-27

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே பல்வேறு அதிரடியான திட்டங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய மூன்று தலைநகரங்களை நிர்வகிக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதேபோல் அமராவதியை சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தை திரும்ப பெறும் மசோதாவும் கொண்டு வரப்பட்டது.

175 இடங்கள் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 151 உறுப்பினர்களை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வைத்துள்ளது. இதனால் இரு மசோதாக்களும் எளிதில் நிறைவேறின. ஆனால் 58 உறுப்பினர்களை கொண்ட சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். 28 உறுப்பினர்களை கொண்டுள்ள தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா பின்னடைவை சந்தித்தது.

எனவே மேலவையை கலைப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். இதுபற்றி சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் மேலவையை கலைப்பது தொடர்பான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேறியது.

ஆந்திர சட்டமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த தீர்மானம் எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆந்திராவில் மேலவை விரைவில் கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *