தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை-விஜயபாஸ்கர்

சென்னை, ஜனவரி-27

தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுகாதார அதிகாரிகளுடன் அவர், ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் யாருக்கும் கரோனா வைரஸால் பாதிப்பு இல்லை. சீனாவிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது.

சென்னை, திருச்சி கோவை விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ஆகவே தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்கிறது. இன்றிலிருந்து தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். கரோனா வைரஸ் என்பது சுவாசிப்பதன் மூலமாக தான் பரவுகிறது.

கரோனா வைரஸ் சுவாச குழாயினுள் புகுந்து, சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இது சில நாட்களில் உயிரையும் பறிக்கும் அளவு வீரியம் வாய்ந்ததாக உள்ளது என சீன மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *