சென்னையில் மியாவாக்கி: பசுமை புரட்சிக்கு தயாராகிறது தலைநகரம்!!!

சென்னை, ஜனவரி-25

சென்னை கோட்டூர்புரத்தில் உருவாகும் மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளில் நடப்படவுள்ள மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகரட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்று நட்டு, அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர  சென்னை  மாநகரட்சி  பகுதிகளில்  காலியாக  உள்ள  இடங்கள்,  நீர்நிலை ஓரங்கள்  மற்றும்  அரசு  புறம்போக்கு   இடங்களில்  விதிமுறைகளுக்கு  உட்பட்டு பரிசாட்திய முறையில்   மியாவாக்கி  நகர்புற  காடுகள்  என்ற  முறையினை   பயன்படுத்தி   அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்க மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்   சிறப்பு  திட்டங்கள்  செயலாக்கத்துறை  அமைச்சர்   திரு.எஸ்.பி.வேலுமணி  அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதன்படி,  மியாவாக்கி  எனும்  அடர்ந்த  நகர்புற  காடுகளை  உருவாக்கும்  திட்டத்தில் பெருநகர  சென்னை  மாநகரட்சி,  அடையாறு  மண்டலத்திற்குட்பட்ட  கோட்டூர்புரத்தில்  உள்ள மாநகராட்சிக்கு  சொந்தமான  நிலத்தில்  ஆணையாளர்  பிரகாஷ்,  இ.ஆ.ப.,  அவர்கள் இன்று (25.01.2020) மரக்கன்று நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மியாவாக்கி நகர்புற காடுகள் முறையானது ஜப்பானிய தாவரவியல் நிபுணர் திரு.அகிரா மியாவாக்கி என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு சிறந்த தாவரவியல் தொழில்நுட்ப முறையாகும். இம்முறையை  பயன்படுத்தி  ஒரே இடத்தில்  அடர்த்தியான,  மண்ணின்  தன்மைக்கு  ஏற்ப  30 டஜன்  நாட்டுப்புற  வகை  மரங்களை  வளர்க்கலாம்.  இம்முறையில்  வளர்க்கப்படும்  மரங்கள் சாதாரண  மரங்களை  விட  10  மடங்கு  அதிக  வளர்ச்சியும்,  30  மடங்கு  அதிக  அடர்த்தியும் கொண்டதாக  இருக்கும். 

மேலும், இம்முறையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு    பிறகு    எந்தவொரு    பராமரிப்பு    பணிகளும்    தேவைப்படாது.    இவ்வகை அடர்காடுகளில் உருவாகும் மரங்கள் முதல் வருடத்தில் 11.7 டன் கரிய அமில வாயுவை உறிஞ்சி, 4டன் ஆக்ஸிஜனையும், முதிர்ச்சியடைந்த பிறகு வருடத்திற்கு 43.5 டன்  கரிய அமில  வாயுவை உறிஞ்சி, 200 டன் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.

எனவே, இந்த மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலம், கோட்டம்-175ல் காந்திநகர் கெனால் பேங்க் சாலையில் 23800 சதுர அடி கொண்ட  இந்நிலத்தில்  20,724  சதுர  அடியில்  ரூ.20  இலட்சம்  மதிப்பீட்டில்  40  வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 2000 மரக்கன்றுகள் முறையே நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, வேம்பு, மரவல்லி, தேக்கு, அகத்தி, மே புளவர், பப்பாளி, அசோக மரம், பனை மரம், செண்பகம், மந்தாரை, வாழை, நெல்லி, முருங்கை, நாட்டு வாகை, சப்போட்ட, சரக் கொன்றை, கறிவேப்பிலை, ஆடா தொடா, குண்டு மல்லி, வெட்டி வேர், துளவி, அரளி, ரோஜா,

செம்பருத்தி, மாதுளை, சுண்டைக்காய் மற்றும் கொடிகள் வெற்றிலை, பூசணி, வெள்ளாரி, சங்கு பூ, முல்லை, பாகல், தூதுவளை, மிளகு போன்ற வகைகள் அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலத்தில் 1,600 மெட்ரிக்டன் அளவிலான கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இக்கட்டிட   கழிவுகள்   அனைத்தும்   அப்புறப்படுத்தப்பட்டு   அடர்வனம்   அமைக்க   4   அடி ஆழத்திற்கு  மண்  எடுக்கப்பட்டு  80  மெட்ரிக்டன்  திடக்கழிவுகள்,  18  மெட்ரிக்டன்  தென்னை நாறு,  12  மெட்ரிக்டன்  மாட்டு  சாணம்  மற்றும்  2  மெட்ரிக்டன்  வைக்கோல்  என  மொத்தம்  112 மெட்ரிக்டன் அளவிற்கு 3 அடுக்குகளாக அடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக வளசரவாக்கம் மண்டலம் ராயலா நகர் பகுதியில் மியாவாக்கி நகர்புற காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 20 இடங்கள் கண்டறியப்பட்டு மியாவாக்கி முறை செயல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறாக     உருவாக்கப்படும்     நகர்புற     காடுகளினால்     நகர்புற     மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படுத்தும் சூழ்நிலை உருவாகும். மேலும் நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை   பறவை  இனங்கள்  மற்றும்  பூச்சி  இனங்கள் விருத்தியடையக்கூடிய   நிலை   உருவாகும்   என   ஆணையாளர்   பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த  ஆய்வின்  போது  தெற்கு  வட்டார  துணையாளர்  டாக்டர்  ஆல்பி  ஜான்  வர்கீஷ், இ.ஆ.ப.,  அவர்கள்,  மேற்பார்வை  பொறியாளர்  (தெற்கு)  திரு.கே.பி.விஜயகுமார்,  அடையாறு மண்டல  அலுவலர்  திரு.என்.திருமுருகன்,  செயற்பொறியாளர்கள்,  உதவி  செயற்பொறியாளர் மற்றும் ஈ.சி. பாரஸ்ட் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *