கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் 11 பேர்

சென்னை, ஜனவரி-25

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.

இதில், 7 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், மேலும், 2 பேர் பெங்களூரு மற்றும் ஹைதரபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 20 ஆயிரம் பேரில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதால், மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளுக்கு சென்றுள்ள 73 பேரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 2 பேருக்கு புனே ஆய்வுக்கூடத்தில் நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மற்றும் சென்னை, மும்பை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *