சூரிய ஒளி மின் உற்பத்தியில் சாதனை கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது

விசாகபட்டினம், ஜனவரி-24

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மூலம் 15 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்த கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

இந்திய அளவில் ‘நகா்ப்புற சுற்றுப்புற மேலாண்மை’ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க சக்தியை பயனுள்ள வகையில் மறு உபயோகப்படுத்தும் திட்டத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் சாதனை படைத்த கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

இதற்கான விருது வழங்கும் விழா விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது, கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் விருதினை பெற்றுக்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்பாடு, நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் தலா ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உக்கடம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை 15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வெள்ளலூரில் கட்டப்படும் பாதாளச் சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில், ஆசிய வங்கி நிதியுதவியில் 2 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமும், வெள்ளலூரில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் 7 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *