நடிகர் சங்க தேர்தல் செல்லாது, மறு தேர்தல் நடத்த அதிரடி உத்தரவு

சென்னை, ஜனவரி-24

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்றும், மூன்று மாதத்திற்குள் புதிய வாக்காளர் பட்டியலை தயார் செய்து மறு தேர்தலை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மேலும் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிடப்பட்டது. மேலும், தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *